ரயில் பயணங்களில்
பயணிகளின் கணிவான கவனத்திற்காக
சொன்ன அந்த அறிவிப்பு
அன்று மட்டும் எனக்கு
அசிரீரி போல கேட்டது
பச்சைக்கொடி காட்டிய ஸ்டேஷன் மாஸ்டர்
உன் தந்தையாய் இருந்திருக்க கூடாதா
என்ற எண்ணம் என்னுள் வந்து போனது
நீ அருகில் இருந்ததால்
அன்று மட்டும் தர்மப்ரபுவானேன்
ஒரு நமட்டு சிரிப்புடன் சென்றாள்
பிச்சைக்கார கிழவி
சக்கரை இல்லாத காபி
ஆறிப் போன இட்லி
இரண்டு நாட்களுக்குமுன் செய்த சமோசா
அன்று மட்டும் எல்லாமே சுவைத்தது
அதிகாலை வானத்தை விட
அழகாக இருந்தது நீ முறித்த சோம்பல்
ஒரு நாளில் இரண்டு விடியல்
இருந்திருக்க கூடாதா...
எல்லா பயணத்திற்கும் ஒரு முடிவு உண்டு
என நான் யோசிக்கவே இல்லை
ஆனால் நம் வாழ்க்கையின் விதி
வேறு விதமாக யோசித்து விட்டது
திடீரென எதிர் பக்கத்தில் இருந்து
வேகமாக கடந்து செல்லும்
ரயில்வண்டியை போல
நீ என்னை கடந்து சென்று விட்டாய்..
இன்றும் என் பயணங்கள் தொடர்கின்றன
தனிமையாக அல்ல
உன் நினைவுகளோடு இனிமையாக ...